கன்னியாகுமரி மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற பேரவை சார்பில் வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற பேரவையின் நிறுவனர் தியோடர் சேம் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்டத்தின் ஒட்டுமொத்த கிறிஸ்தவர் கூட்டமைப்பு சார்பில், வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம். குமரி வட்டத்தில் மதத்தின் பெயரால் நாங்கள் நசுக்கப்பட்டுள்ளோம். எனவே இந்தத் தேர்தலிலும் மதவாத கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எங்களின் எந்த விதமான ஆதரவும் கிடையாது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை எதிர்த்தும் நாங்கள் களம் காண்கிறோம். இனி வரும் காலங்களில் அனைத்து சட்டப்பேரவை தேர்தலிலும், நாங்கள் களம் காண முடிவு செய்துள்ளோம். எங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எங்களின் பட்டா நிலங்களில் ஆலயம் கூட கட்ட முடியாத நிலை இருக்கிறது. கிறிஸ்தவ விழாக்கள் நடத்த முடியாத நிலை உள்ளது. நாங்கள் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.