கேரள மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சிக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுத்தனமாக கொட்டப்படுகின்றன. குறிப்பாக, கேரள லாரிகளில் கொண்டு வரப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் ஆள் நடமாட்டம் இல்லாத குளங்கள், ஆறுகளின் கரைகளில் கொட்டி விடப்படுகிறது.
இதனால், கோழிக் கழிவு கொட்டப்படும் நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் மாசுபடுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்ல முடியாத அளவு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கேரளாவில் இருந்து குமரிக்கு கோழிக் கழிவுகள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை கேரளாவில் இருந்து கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அழகப்பபுரம் ஊர் வழியாக வந்தது. அப்போது அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதால் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு லாரியை மடக்கி பிடித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் லாரி ஓட்டுநர் சஷியைக் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருவனந்தபுரம் அடுத்த புத்தன் வீடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் கோழி இறைச்சிக் கழிவுகளை குமரி மாவட்டத்தில் குளத்தின் கரைகளில் கொட்ட வந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: மூதாட்டி கழுத்து அறுத்துக் கொலை; சிக்கியது சிறுவனின் சிசிடிவி காட்சி