கன்னியாகுமரி: கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தொடர்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து, அவர்களோடு தனிமையில் இருந்ததை ரகசியமாகப் பதிவு செய்து, அவற்றைக் கொண்டு மிரட்டி பணம் பறித்ததாக, நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர் மீது பல புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காசியின் மீது, ஆறு பெண்களும், இளைஞர் ஒருவர் கந்துவட்டி புகாரும் அளித்தார். இந்தப் ஏழு புகார்கள் மீது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கந்துவட்டி தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஏனைய ஆறு வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகளைத் தயார் செய்யும் பணிகளில், சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் காசி மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நேசமணி நகர் காவல் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் சிபிசிஐடி காவல்துறையினர், பாலியல் வழக்கு தொடர்பாக காசி மீது குற்றப் பத்திரிகைத் தயார் செய்து, சென்னையில் உள்ள உயர் அலுவலர்களின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளனர்.
இந்த குற்ற பத்திரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்ததும், இதனை நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து காசியை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர். இதேபோல பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காசியின் நண்பர் தினேஷ் வெளிநாட்டில் உள்ளார். அவரை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர அவரது பாஸ்போர்ட்டை முடக்கி சிபிசிஐடியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி காசியின் மீது மோசடி புகார் அளித்த இளைஞர் கடத்தல்!