கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தியா (26). பி.இ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த உறவினரான ரஜீஷ் (28) என்ற டிம்போ ஓட்டுனரை காதலித்தார்.
காதலியிடமிருந்து நழுவ முயற்சித்த காதலன்
காதலர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தியா கர்ப்பமானார். இதுகுறித்து காதலன் ரஜீஷிடம் சந்தியா கூறியதையடுத்து, அவரை சந்திப்பதை ரஜீஷ் தவிர்த்து வந்துள்ளார். இதனால் உஷாரான சந்தியா தனது பெற்றோரிடம் நிலைமையை எடுத்துரைத்தார். மேலும், ரஜீஷ் தன்னிடமிருந்து விலகி செல்ல முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர், ரஜீஷை சந்தித்து சந்தியாவை திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ரஜீஸ் தனது பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
ரகசிய திருமணம்
மேலும், தனது வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களுக்கு தெரியாமல் சந்தியாவின் வீட்டருகே உள்ள கோயிலில் மாலை மாற்றி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதோடு பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்து கொண்டனர்.
இதையடுத்து, ரஜீஷ் ஓரிரு வாரங்கள் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் மாமானார் வீட்டிலேயே சந்தியாவுடன் ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார். பின்னர், கேரளாவிற்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற ரஜீஷ், சந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தலைமறைவாகியுள்ளார்.
பல மாதங்களாக காதலன் ரஜீஷை தொடர்பு கொள்ள நினைத்தும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் சந்தியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை புரிந்து கொண்ட சந்தியா ரஜீஷ் உடன் சேர்ந்து வைக்க காவல்துறையினர் உதவியை நாட முடிவு செய்தார். அதன்படி, தக்கலை காவல் நிலையம், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகாரளித்தார்.
காதலன் வீட்டில் காதலி தர்ணா
இந்நிலையில், திடீரென ஒருநாள் சந்தியாவை செல்போனில் தொடர்பு கொண்ட ரஜீஷ், உன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும் தனக்கு வேறு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்தது மட்டுமின்றி உன்னை விவாகரத்து செய்ய போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத சந்தியா,கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி அழகியமண்டபம் பகுதியில் உள்ள தனது காதலன் வீட்டிற்கு சென்று கைக்குழந்தையுடன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு விரைந்த காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தி காதலன் வீட்டிலேயே தங்குவதற்கு வழிசெய்தனர். அப்போது தான், ரஜீஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியவந்துள்ளது. இதையடுத்து,ரஜீஷின் பெற்றோர் அந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், சந்தியா தனது தாயார், கைக்குழந்தையுடன் தனது காதலன் வீட்டிலேயே வசித்து வந்தார்.
காதலி, குழந்தையை கொடூரமாக தாக்கிய காதலன்
இதுகுறித்து கேரளாவில் தலைமறைவாக இருந்த ரஜீஷிக்கு தெரியவந்ததும், உடனடியாத வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த ரஜீஷ், வீட்டிலிருந்த சந்தியா அவரது தாயார் மற்றும் குழந்தையை கம்பியால் தாக்கி வீட்டை விட்டு விரட்டியுள்ளார். மேலும், வீட்டில் இருந்த அவர்களது துணிமணிகளையும் பொருள்களையும் வீட்டிற்கு வெளியே வீசியெறிந்து வீட்டை பூட்டி தப்பியோடினார்.
இதில் சந்தியா மற்றும் அவரது குழந்தைக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், படுகாயமடைந்த சந்தியாவையும், குழந்தையும் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காதலியை தாக்கி தப்பியோடிய ரஜீஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.