தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வசந்தகுமாரும், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டனர். தேசிய அளவில் இரண்டு மிகப்பெரிய கட்சிகள் மோதியதால் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் களம் சூடு பறந்தது. எனினும், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் பிறகு குமரி மாவட்டத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மறைமுகமாக பனிப் போர் நடைபெற்று வந்தது.
பொன். ராதாகிருஷ்ணன், வசந்தகுமார் இருவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் ஒருவரை ஒருவர் மறைமுகமாகவும், நேரடியாகவும் தாக்கிப் பேசி வந்தனர்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாருக்கு குமரி மாவட்ட பாஜக சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது முகநூலில் வசந்தகுமாரின் புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல பாஜக கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், ஏராளமான பாஜக தொண்டர்கள் முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும் வசந்தகுமாரின் புகைப்படத்தை முகப்பு புகைப்படமாக வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாஜகவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் வசந்தகுமாரின் மனிதநேய மாண்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அரசியல் நாகரிகம் கருதியும் பாஜகவினர் அஞ்சலி செலுத்தி வருவது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.