முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. அதில் சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் அமமுக கட்சியினை தொடங்கினார். அதிமுகவினர் அனைவருமே தன்னுடன்தான் இருக்கின்றனர் என அவர் கூறி வந்தார். அதேபோல், குமரி மாவட்டத்திலும் தினகரன் தலைமையை ஏற்று அதிமுகவினர் பலர் அவரது அணியில் இணைந்தனர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் வனத் துறை அமைச்சராக இருந்த பச்சைமால், முன்னதாக அதிமுகவில் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக அதிலிருந்து விலகி பின் அமமுகவில் இணைந்தார். அமமுகவின் கழக அமைப்புச் செயலாளராகவும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அவரது தலைமையில் ஏராளமானோர் அதிமுகவில் இணையப்போவதாக தகவல் பரவியது. இது குறித்து அப்போது பேசிய அவர், அதிமுகவினர் நட்பு காரணமாகதான் என்னை சந்தித்தனர் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று தீடீரென பச்சைமால், அமமுகவில் எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் ஆகியோரது தலைமையின் கீழ் ஏராளமான அமமுகவினர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். அனைவரும் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் முன்னிலையில் தாய்க் கழகமான அதிமுகவில் இணையப்போவதாக பச்சைமால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியால்தான் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் ஆகிய இருவரும் அதிமுகவில் இணையப்போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இவர்களிருவரும் அதிமுகவில் இணையப்போகும் தகவல் வெளியானதை அடுத்து இருவரையும் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக அமமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், குமரி கிழக்கு மாவட்ட கழகப் பணிகளை மேற்கொள்ள அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராக உள்ள எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா தலைமையில் பொறுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி - புகழேந்தி சந்திப்பு; அமமுக அஸ்தமனம் ஆகிறதா?