கன்னியாகுமரி: அரசு ரப்பர் தோட்ட கழகத்தின் கீழ் கீரிப்பாறை, காளிகேசம் உட்பட ஒன்பது கோட்டங்கள் உள்ளன. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரப்பர் மரங்களில் இருந்து பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஊதிய உயர்வு தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் அதன் சங்கங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதனிடையே தொழிலாளர்களுடன் ஆகஸ்ட் மாதம் சென்னையில் தமிழ்நாடு அரசு தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஊதிய உயர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் உடன்பாட்டை குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக நிர்வாகம் அமல்படுத்த முன்வரவில்லை எனவும், ஊதிய உயர்வை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதையும் கண்டித்து கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசையும் குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு, ஐஎன்டியுசி, பிஎம்எஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களோடு ஆளுங்கட்சி ஆதரவு தொழிற்சங்கமான தொ.மு. சவும் இணைந்து வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டது. அரசுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு சில கோட்டங்களில் தொழிலார்கள் காத்திருப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் ஒரு மாதமாக வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாரிகளுக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நாகர்கோயிலில் மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. அதிகாலை 2 மணிக்கு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த தொழிற்சங்கத்தினர் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் 7ஆம் தேதி முதல் மீண்டும் பணிக்கு திரும்புவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு தினம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு