கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தினம்தோறும் சத்தான உணவுகள் முருங்கை இலை, ஆம்லெட், மூலிகை உணவுகள் என நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்க கூடிய உணவு வகைகளை தினந்தோறும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தோவாளை ஒன்றியம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு என தனித்தனியாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் விதமாக கபசுரக் குடிநீர் வழங்க சில்வர் கேன், கபசுரப்பொடி, முககவசங்கள் ஊராட்சித் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
இதன் தொடக்க நிகழ்ச்சி அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது .இந்த சில்வர் கேனை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஊராட்சித் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகளிடம் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், அனைத்து பொதுமக்களுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும் இதை சேவை மனப்பான்மையுடன் அனைவரும் செய்ய வேண்டும் தற்போது தமிழ்நாட்டில் எல்லா வகை நோய்களுக்கும் சித்த மருத்துவம் தான் கை கொடுக்கிறது எனவே அனைவரும் சித்த மருத்துவத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். என இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன் உட்பட சித்த மருத்துவர்கள், ஊராட்சி தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.