கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ரமேஷ் நாயகம். ஆட்டோ ஓட்டுநரான இவர் இன்று தனது ஆட்டோவில் சவாரி முடித்துவிட்டு குளச்சலிலிருந்து முட்டத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பி சென்றுகொண்டிருந்தார்.
ஆட்டோவானது குளச்சல் அருகே கொட்டில்பாடு என்ற பகுதியில் சென்றபோது சாலையில் குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாகச் சிக்கியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலைதடுமாறி எதிரே அமீர் என்பவர் ஓட்டிவந்த கார் மீது மோதியது.
இதில் ஆட்டோவுடன் சகாய ரமேஷ் நாயகம் அருகிலிருந்த மின்கம்பத்தில் தூக்கி வீசப்பட்டார். அப்போது மின்கம்பத்திலிருந்த மின்மாற்றியும் ஆட்டோ மீது விழ சகாய ரமேஷ் நாயகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் காவல் துறையினர் சகாய ரமேஷ் நாயகத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.