தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், கன்னியாகுமாரி மாவட்டத்திலும் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
அலுவலர்களுக்கு இத்திட்டத்தில் யூசர் நேம் பாஸ்வேர்ட் வழங்கப்பட்டதை அவர்கள் முறைகேடாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எல்லாம் பணம் வர வைத்து மோசடி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.
இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிபிசிஐடி அலுவலர்கள் நடத்திய விசாரணையில், கிசான் திட்டத்தில் நிதியுதவி பெற்றவர்களில் 1,716 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கிஷன் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 14 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களை அலுவலர்கள் மறு ஆய்வு செய்தனர்.
அதில் 241 பேர் தகுதியற்றவர்கள் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வங்கி மேலாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் கணக்குகளில் இருந்து நேரடியாக பணத்தை திரும்ப பெரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 52 பேரிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுபோல பணத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் 41 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.