கன்னியாகுமரி: கன்னியாகுமரி வனக்கோட்டம், பூதப்பாண்டி வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள பணகுடி பிரிவில் அமைந்துள்ள கன்னிமாரா ஓடையில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழக்கம். இந்த வனப்பகுதியில் அரிய வகையான கருங்குரங்குகள் (கருமந்தி) அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
இந்த கருங்குரங்குகள் பார்ப்பதற்கு அழகாகவும், அதன் வால் நீளமாகவும் இருக்கும். பாதுகாப்பு பட்டியலில் கருங்குரங்குகள் இடம் பெற்றுள்ளன. இந்த வனப்பகுதியில் அவ்வப்போது பல்வேறு வகையான வனவிலங்குகள் நடமாடுகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம்(டிச.12) மாலையில் திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தனது நண்பர்களுடன் கன்னிமாரா ஓடைப் பகுதிக்கு வந்து உள்ளார். அங்கு, மது அருந்திவிட்டு அங்கிருந்த ஆலமரத்தில் விளையாடிக் கொண்டிருந்த கருங்குரங்கின் வாலைப் பிடித்து இழுத்துத் துன்புறுத்தி உள்ளார்.
இதனால் குரங்கானது அவரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, அவர் வாலை விடாமல் பலமாக இழுத்துத் துன்புறுத்தி உள்ளார். அத்துடன் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளார். மேலும் பாதுகாப்பு பட்டியலில் கருங்குரங்குகள் இடம் பெற்றுள்ள நிலையில், அதனைத் துன்புறுத்தியது வனவிலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா, ரஞ்சித் குமாரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி, மாவட்ட வனப்பாதுகாப்பு உதவி பாதுகாவலர் சிவக்குமார், ரேஞ்சர் ரவீந்திரன், காவலர் மணிகண்டன் உள்ளிட்ட வனக்குழுவினர் ரஞ்சித் குமார் வீட்டிற்குச் சென்று கைது செய்து நாகர்கோவிலில் உள்ள வன அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், அவர் மீது வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரி கூறும்போது, “வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன விலங்குகளைத் துன்புறுத்துவது குற்றமாகும். கருங்குரங்கின் வாலைப் பிடித்து இழுத்துத் துன்புறுத்திய குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு இடம் உள்ளது” என தெரிவித்தார்.