கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளையைச் சேர்ந்தவர் ஜெயிலானி. கூலித்தொழிலாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. மேலும் இவரது பெயர் ரவுடி பட்டியலிலும் உள்ளது.
இவருக்கும் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதி அதிமுக முன்னாள் செயலாளர் உதயகுமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி களியக்காவிளையில் இருந்து ஜெயலானி குழித்துறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, படந்தாலமூடு அருகே அதிமுக பிரமுகர் உதயகுமார் கார் மோதியதில் ஜெயலானி தூக்கி வீசப்பட்டு, அவ்வழியாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இது தொடர்பாக களியக்காவிளை காவல் துறையினர் விபத்து என்று பதிவு செய்தனர். இந்த விபத்து திட்டமிட்ட கொலை எனவும், வழக்கை விபத்து என காவல் துறையினர் மாற்றி விட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், தனிப்படை காவல் துறையினர் ரகசிய விசாரணை செய்தனர்.
விசாரணையில், அது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தினர். உறுதியானதையடுத்து, விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, உதயகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான உதயகுமாரை நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தேனி, வழக்குரைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை