கன்னியாகுமரி மாவட்டம் 31ஆவது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காந்தி மண்டபத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் நிருபர்களிடம் கூறியதாவது :-
தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. வாகனத்தில் செல்லும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும். அதேபோல் குடிபோதையில் வாகனம் ஒட்டகூடாது.
கடந்த ஆண்டு (2019) குமரிமாவட்டத்தில் நடைபெற்ற சாலைவிபத்துகளில் 2011 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் 216 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேபோல் நீண்ட தூரம் பைக்கில் செல்வதை தவிர்க்கவேண்டும்.
நீண்டதுரம் செல்லும் போது பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் லேசாக உரசினால்கூட பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நீண்டதூர பயணத்திற்கு பஸ் அல்லது காரை பயன்படுத்துங்கள்.
குடியரசு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடல்வழி ரோந்து பணியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர கன்னியாகுமரியில் உள்ள தங்கும்விடுதிகள், தங்கியிருப்பவர்கள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் டிஆர்ஓ ரேவதி, ஆர்டிஓ சந்திரசேகர், டிஎஸ்பி பாஸ்கரன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: