கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துரை பகுதியில் மீனவர்களுக்கு, தன்னார்வலர்கள் பலர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி உணவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை நிவாரணமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொருள்களை மீனவர்கள் கூட்டமாக நின்று வாங்கியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த புதுக்கடை காவல் துறையினர், அவர்களைக் கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த மீனவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இந்தக் கல்வீச்சில் காவல் துறை வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக புதுக்கடை காவல் துறை 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், முள்ளூர்துரை அபியம் பகுதியைச் சேர்ந்த ஜெர்சன், ராஜேஷ், மவ்லின், பாபு, விமல்ராஜ், டென்சன், கிறிஸ்டி, சகாயராஜ், ஜான்பவுல், போஸ்கோ உள்ளிட்ட 21 பேர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமின் கோரி மனு அளித்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மன்னார்குடி அருகே அதிமுக சார்பில் நிவாரண உதவி வழங்கிய அமைச்சர்!