கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இரும்பிலி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் அடுத்தடுத்து இரண்டு அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு கடைகளும் கழிந்த 45 நாட்களாக ஊரடங்கு உத்தரவால் அடைக்கப்பட்டிருந்தது.
தற்போது சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் மதுபான கடைகளைப் பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றி, இன்று முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திறக்க அனுமதித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை கடைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனையடுத்து குளச்சலை அடுத்த இரும்பிலியில் அருகருகேயுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளின் பின்பக்கத்திலிருந்து திடீரென தீப்பிடித்து எரியும் கருகிய வாசனை வந்துள்ளது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடம் வந்த குளச்சல் தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்து சாம்பலாகிய நிலையில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீர் கொண்டு, தீ கனல்களை அணைத்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வளாகத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதும் இரண்டு கடைகளின் பின்பக்க ஜன்னல் வழியாக தீ பரவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் கடைக்குத் தீ வைத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்த நிலையில் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் இன்று மதுபான கடை திறக்க, இருந்த நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: