கன்னியாகுமரி: கவார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.. பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு வரும் சுற்றுலாபயணிகள் பரளியாற்றில் குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நண்பர்கள் 7 பேர் கடந்த 28ஆம் தேதி, சென்னையிலிருந்து ரயில் மூலம் திருநெல்நெல்வேலிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து வாடகை கார் மூலம் தென்காசி மாவட்டம் குற்றாலம் ,பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி பார்த்துவிட்டு, இன்று குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலம் வந்துள்ளனர்.
அங்கே பாலத்தை சுற்றி பார்த்துவிட்டு பாலத்தின் அடிப்பகுதியில் பரளியாற்றில் குளித்துள்ளனர். இந்நிலையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் கார்த்திகேயன் மற்றும் நாகராஜ் ஆகியோர் தண்ணீரில் அடித்து செல்லபட்டனர்.
இதையடுத்து, அவர்களுடன் வந்த நண்பர்கள் அப்பகுதியினர் உதவியுடன் குலசேகரம் தீயணைப்பு துறைக்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் மாயமான இரண்டு இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட கார்த்திகேயன் 30 மற்றும் நாகராஜ் 30 ஆகிய இருவரின் உடல்களும் ஆற்றில் நீண்ட நேர தேடுதலுக்கு பின் தீயணைப்பு துறையினர் மீட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கையைச் சேர்ந்த 14 பேரிடம் போலீஸ் விசாரணை