காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், சூர்யா (26). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவரை சூர்யா காதலித்து திருமணம் செய்த நிலையில், இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
சூர்யா வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்தவர் 23 வயதான கார்த்திக். இவர் காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள விநாயகபுரம் பகுதியில் சொந்தமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இருவரும் அவ்வப்போது இரவு நேரங்களில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மேலும், சூர்யா அவ்வப்போது கார்த்திகை அடிக்கடி மது அருந்த அழைப்பது வாடிக்கை என்று கூறுகின்றனர்.
இதனால் பலமுறை எரிச்சல் அடைந்த கார்த்திக்கும், இதை வெளியே காண்பிக்க முடியாமல் சூர்யாவை தவிர்க்க முயற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஊர்த் திருவிழாவின்போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இருவரும் பேசாமல் இருந்து வந்ததாகவும் கூறுகின்றனர். இதனிடையே நேற்று இரவு சூர்யா, கார்த்திக்கை மது அருந்தலாம் எனக் கூறி மீண்டும் அழைத்துள்ளார்.
பல நாட்களாக பேசாமல் இருந்த நண்பன் மது அருந்த அழைத்ததால், ஏதாவது வாக்குவாதம் மற்றும் பிரச்னை ஏற்படும் என்று எண்ணிய கார்த்திக், ஒரு கத்தியை எடுத்து தன்னுடைய பைக்கின் பின்புறம் மறைத்து வைத்துக் கொண்டு ஆரிய பெரும்பாக்கம் வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சூர்யாவைத் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அபிராமி நகர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் இரண்டு மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டு, ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியுள்ளது.
அதில், கோபமடைந்த கார்த்தி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மது போதையில் இருந்த சூர்யாவை தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்து போன சூர்யாவின் தலையில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால் சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக், பைக்கை எடுத்துக் கொண்டு நேராக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே சென்று, நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். இதனால் அதிர்ந்து போன போலீசார், கார்த்திக்கை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என கார்த்திக்கிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் 100-ஐத் தாண்டிய காற்றின் தரக் குறியீடு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?