ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும்பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் திமுக நட்சத்திர வேட்பாளர் டி.ஆர். பாலு ஆகியோர் இன்று தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, நேற்று திமுக தலைவர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் மக்களின் எழுச்சியும், விழிப்புணர்வும் இதுவரை காணாத அளவிற்கு இருந்தது.
டெல்லியில் ராகுல் ஆட்சியை அமைப்பார்; திமுகவினரும் நாற்பதுக்கு நாற்பது வென்று காட்டுவோம் என உறுதியாக இருக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பொய் வாக்குறுதிகளை அளிப்பவர் மோடி, ஆனால் நாங்கள் உண்மையான வாக்குறுதிகளை அளித்து அவற்றை செயல்படுத்தும் வகையில் தலைவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, திமுகவின் தேர்தல் அறிக்கையை முழுவதுமாக நிறைவேற்றிக் காட்டுவோம் என்று டி.ஆர். பாலு நம்பிக்கை தெரிவித்தார்.