காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரமேட்டூரில் ஏழு பசுமாடுகள் நேற்று (ஏப்.19) வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அவை இரவு வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. ஆகையால் இன்று (ஏப்.20) காலையில் பசுமாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளைத் தேடி சென்றபோது அவை வயலில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து சிங்காடிவாக்கம் ஊராட்சியில் உள்ள அப்துல்கலாம் மக்கள் சேவை மன்றத்தின் செயலாளர் ஞானவேல் கூறுகையில், மதுரமேட்டூரில் மொத்தம் ஏழு பசுமாடுகள் உயிரிழந்துள்ளன. இதில் ரவி (2 மாடுகள்) , கண்ணன் (2 மாடுகள்), கோபால், குமார், நாகேஸ்வரி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் தலா 1 ஆகிய ஏழு பசு மாடுகள் உயிரிழந்து கிடந்தன.
இத்தகவல் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டு, பின்னர் கால்நடை மருத்துவக் குழுவினர் நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். பசுமாடுகள் என்ன காரணத்தால் உயிரிழந்தன என்ற விவரம் மருத்துவக் குழுவினரின் ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும் என்றார். இச்சம்பவம் மாட்டின் உரிமையாளர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.