காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்திற்குள்பட்டு 14 காவல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் காவல் நிலையங்களில் திருட்டு, விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி உரிமை கோரப்படாத ஏராளமான வாகனங்கள் காவல் நிலைய வளாகங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடித்து வாகனங்களை ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டும், வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை, மேலும் வாகனங்களை யாரும் உரிமையும் கோரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் ஏலம்விட்டு அதன்மூலம் வரும் விற்பனைத் தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த காவல் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 காவல் நிலையங்களிலும், எவரும் உரிமை கோராத நிலையில் உள்ள ஆயிரத்து 817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள், 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் ஆயிரத்து 858 வாகனங்கள், காஞ்சிபுரம் மாவட்ட காவலர் பயிற்சிப் பள்ளி, ஆயுதப் படை பயிற்சி மைதானத்திற்கு கொண்டுவந்து காட்சிக்காக நிறுத்திவைக்கப்பட்டு, வாகன உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் உரிய ஆவணங்களைக் கொண்டுவந்து காண்பித்து வாகனங்களை எடுத்துச் செல்லவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் ஏலத்தில் பங்குபெற பொதுமக்கள் தவறாது கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். வாகனத்தை ஏலம் எடுப்பவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன், இருசக்கர வாகனத்திற்கு 12 விழுக்காடும், மூன்று, நான்கு சக்கர வாகனத்திற்கு 18 விழுக்காடும் விற்பனை வரியைச் செலுத்திவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்குபெற விரும்பும் பொதுமக்கள் தவறாது தங்களது அசல் ஆதார் அட்டை, அதன் நகலைக் கொண்டுவர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க பொதுமக்கள், இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.
இதன்மூலம் பல ஆண்டுகளாக காவல் நிலையங்களில் யாரும் உரிமை கோரப்படாததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 858 வாகனங்களுக்கு நாளை மறுநாள் முடிவு ஏற்பட்டு அரசுக்கு வருமானம் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானா பாஜக தலைவர் கைது: ஹைதராபாத்தில் நட்டா...!