காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவாமல் இருக்க பெருநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஓர் பகுதியாக நாள்தோறும் வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனை, ஆக்ஸிஜன் அளவை கண்டறிவதற்கு 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தற்போது ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், மேலும் கூடுதலாக மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தன்னார்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
கரோனா தடுப்புபணிகளில் ஈடுபடவுள்ள புதிய தன்னார்வலர்களுக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் பயிற்சி வகுப்பு இன்று(மே 31) நடைபெற்றது. இதில், தெர்மோ ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனையை எவ்வாறு மேற்கொள்வது? ஆக்ஸிஜன் மீட்டரை கொண்டு எவ்வாறு ஆக்ஸிஜன் அளவை கண்டறிவது? உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி , தன்னார்வலர்கள் வீடு வீடாக செல்லும் பொழுது பொதுமக்களிடம் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். இரண்டு முகக்கவசம் பயன்படுத்த வேண்டும். கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் முதலில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.