காஞ்சிபுரம்: 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்திபெற்றதும், அத்தி வரதர் கோவில் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில், பெருமாளின் அவதார நட்சத்திரமான ஹஸ்த நட்சத்திரத்தையொட்டி திருவடி கோயில் புறப்பாடு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவடிகோவில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, ரோஜா நிறப்பட்டு உடுத்தி, வைர, வைடூரிய தங்கம், திருவாபரணங்கள், மல்லிகைப்பூ மற்றும் பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க,வேத பாராயணம் கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி சந்நிதி தெருவில் திரு வீதியுலா வந்து, திருவடி கோயிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் திருக்கோயிலுக்குத் திரும்பினார்.
ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோயிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்து வழிபட்டுச்சென்றனர். மேலும் வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரதராஜப்பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் 3,200 சிலைகளை வைக்க அனுமதி