காஞ்சிபுரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ல் காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மனித வெடி குண்டு தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இதே இடத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஆண்டு தோறும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனால், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, விஜய் வசந்த், முன்னாள் தலைவர் தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
குற்றவாளி கடவுள் அல்ல: இதன் பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதி மொழியை காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “ராஜீவ்காந்தி இறந்த பொழுது கண்ணீர் ஆறாக போனது போல, தற்பொழுது கொலையாளிகள் விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும் பொழுது இதயத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வருகிறது.
எங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இறப்புக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்கிறோம். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்கிறோம். குற்றவாளி குற்றவாளி தான்; கடவுளாக முடியாது” எனக் கூறினார். மேலும், பேரறிவாளன் விடுதலைக்கு பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை சந்தித்து கட்டி தழுவுகிறார்.
கூட்டணியும் கொள்கையும் : அவரது விடுதலையை முதலமைச்சர் கொண்டாடுகிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் இதனை எவ்வாறு பார்க்கிறது மற்றும் காங்கிரஸ் தொடர்ந்து திமுக கூட்டணியில் பயணிக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “காங்கிரஸ் கூட்டணியில் தேர்தல் வருவதற்கு முன்பே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்ய வேண்டும் என சொன்னவர்கள் தான் திமுக.
அதனை தெரிந்து தான் நாங்கள் கூட்டணியில் இருந்தோம், எனவே கூட்டணி வேறு; கொள்கை வேறு. அவர்கள் கொள்கையை அவர்கள் சொல்கிறார்கள். எங்கள் கொள்கையை நாங்கள் சொல்கிறோம். ஆகையால், இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என பதிலளித்தார்.
இதையும் படிங்க: மன்னிப்பை கற்றுக்கொடுத்தவர் எனது அப்பா - ராகுல் காந்தி ட்வீட்