காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்துள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் கேஸ் குடோனில் இன்று மாலை 6 மணி அளவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் போது 10 ஊழியர்கள் குடோனுக்குள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்தானது சுற்றி இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதால், அப்பகுதி குடியிருப்பு பகுதியில் இருந்த, பொதுமக்களும் பலத்த காயமடைந்தனர். இதில் காயமடைந்த ஒரு சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த பணியானது நடைபெற்றது. தீ மின்சார வயர்களில் பட்டு மேலும் பரவாமல் இருக்க இந்த பகுதியை சுற்றுயுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேரில் விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் ஒன்று கீழே விழுந்த வெடித்ததாகவும் ஜீவா (வயது 50), பூஜா (வயது22), நிவேதா (வயது 24), சந்தியா (வயது 20), வடமாநிலத்தை சேர்ந்த இருவர் விபத்தில் காயமடைந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
நேரில் சென்று ஆய்வு நடத்திய வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி , முதற்கட்ட விசாரணையில் சிலிண்டர்களை கையாளும் போது கவனக்குறைவாக ஊழியர்கள் செயல்பட்டதன் விளைவாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக தொடர்ந்து புகைமூட்டம் பரவி வருவதாலும், சிலிண்டர் கசிவின் வாசனை காரணமாகவும் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சீனாவில் உணவகத்தில் தீ விபத்து - 17 பேர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்