காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(45), இவர் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன் தினம் (நவ.17) இரண்டு பேருடன் ராகவேந்திரா நகர் பாலம் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதனால், படுகாயமடைந்த வெங்கடேசனை கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்ம கும்பல் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததோடு 3 இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார் வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நான்கு தனிப்படைகள் அமைத்து கொலை கும்பலலை தேடி வந்தநிலையில் சகோதரர்கள் மூவர் உட்பட முகமது சதாம் உசேன்(25), முகமது இம்ரான்கான்(21), முகமது ரியாசுதீன்(27), தனுஷ்(26), மணிமாறன்(25), அகமது பாஷா(21), மோகன்ராஜ்(20), உட்பட 10 பேர் இன்று (நவ.19) கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு மாடம்பாக்கம் ஏரிக்கரை அருகே முகமது இஸ்மாயில், இமாம் அலியின் இரட்டை கொலைக்கு பின்னால் இருந்து மூளையாக இந்த வெங்கடேசன் செயல்பட்டதால், அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர். அதோடு யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து திட்டம் தீட்டி கொலை செய்து பழி தீர்த்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
கைது செய்த 10 பேரில் மூன்று பேருக்கு கையும், ஒருவர் காலும் உடைந்தது. போலீசார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது தப்பிச் செல்லும்போது கீழே விழுந்ததில் கை, கால்கள் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: புதுக்கோட்டை சிறுமி மரணம்.. பொங்கி எழுந்த பொதுமக்கள்!