காஞ்சிபுரம்: கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவல் மூன்றாவது அலையாக நாடு முழுவதும் தீவிரமாகப் பரவிவருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை நாளுக்குநாள் அறிவித்துவருகின்றன.
தமிழ்நாட்டில் அனைத்துக் கோயில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயில் நகரில் மூடப்பட்ட கோயில்கள்
இந்நிலையில், கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வெளிநாடு, வெளிமாநிலம் போன்றவைகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்கின்றனர்.
உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல கோயில்கள் மூடப்பட்டு, தமிழ்நாடு அரசு உத்தரவின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் கோபுர வாசலில் நின்றபடி கோபுர தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். அதே நேரம் கோயில்களில் ஆகம விதிப்படி நாள்தோறும் நான்கு கால பூஜைகள் பக்தர்கள் அனுமதியின்றி வழக்கம்போல் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பட்டு நகரம், கோயில் நகரம் எனப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரத்தில் நாள்தோறும் பட்டுச்சேலை எடுத்துவிட்டு கோயிலைச் சுற்றிப் பார்க்கவரும் பக்தர்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பால் கோயில்களைச் சுற்றிப் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திருவொற்றியூரில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் கருவி இஸ்ரோவிடம் ஒப்படைப்பு