காஞ்சிபுரம்: 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த பட்ஜெட் தொடரின் போது, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்த 7,000 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளான இன்று (செப் 15) அவரது உருவச் சிலைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்குத் திட்டத்தின் ஏடிஎம் அட்டையின் மாதிரியை வழங்கி திட்டத்தைத் துவங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “எனது அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்தி இருந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக அமைந்தது காஞ்சி மாநகர். இங்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் துவங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன். இன்று இந்த திட்டத்தைத் துவங்கிவைக்கும் நான் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பெண்கள், உரிமைத் தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆளுகிறான் என்று பொருள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி. ஆனால், பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றியதாக வதந்திகளைப் பலரும் பரப்பினர். ஆட்சிக்கு வந்ததும் நிதி நிலைமை சரி இல்லாததால் தான் அப்பொழுது கொடுக்க முடியவில்லை, அதனைச் சரிசெய்துவிட்டு இப்போது கொடுக்கிறோம். சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி.
நான் ஒரு கையெழுத்துப் போட்டால் அனைத்தும் நிறைவேறும் என்ற அதிகாரத்தைக் கொடுத்தவர்கள் நீங்கள். மக்கள் கொடுத்த வாய்ப்பை மக்களுக்காகத்தான் பயன்படுத்துவேன். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் படித்த பாடமே இந்த திட்டம். மதத்தின் பெயராலும் பழமையான மரபுகளின் பெயராலும் ஆதிக்கம் செய்து பெண்களுக்குக் கல்வி கொடுப்பதைத் தடுத்தவர்கள், குழந்தை திருமணத்தை ஆதரிப்பவர்கள், என்று பெண்களைக் குறைவாகக் கருதுபவர்களுக்கு திமுக மீது அதிகமான வெறுப்பு உள்ளது.
பெண்கள் வீட்டில் உழைக்கும் உழைப்பை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனை அங்கீகரிக்கும் விதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது தான் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. என்னுடைய தாய் தயாளு அம்மாள் கருணை வடிவாய் இருப்பவர். என் மனைவி துர்கா என்னில் பாதி, எனக்கு உறுதுணையாக இருந்து எனக்கு மிகப்பெரிய சக்தியாக இருப்பது என் மனைவி துர்காதான். என் மகள் செந்தாமரை அன்பு வடிவமாய் இருப்பவர். இவர்களைப் போன்றவர்கள் தான் மகளிர் அனைவரும். இதற்கு மகுடம் சூட்டும் திட்டம்தான் இந்த கலைஞர் மகளிர் உரிமத் தொகை திட்டம்.
இந்தியா கூட்டணி கூட்டங்களுக்கு மற்ற மாநிலங்களுக்கு நான் செல்லும்போது தமிழகத்தின் திட்டங்களைப் பற்றிக் கேட்டு அறிந்துகொள்கின்றனர் அதனை மற்ற மாநிலங்கள் பின்பற்ற முயல்கின்றனர். ஜி20 மாநாட்டின் விருந்தில் பங்கேற்றபோது மத்திய அமைச்சர்களும் தமிழகத்தின் திட்டங்களைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டனர். இவையெல்லாம் தமிழக மக்களுக்குக் கிடைத்த பாராட்டாகத் தான் பார்க்கிறேன்." என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்து தர்மத்திற்கு எதிரான கருத்துக்களால் திமுக செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது- அர்ஜூன் சம்பத்