காஞ்சிபுரம்: தமிழகத்தின் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் என இரு அணிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த சோமவார விரத தினமான இன்று (ஆக.8) காஞ்சிபுரத்தில் வழக்குகளை தீர்த்து வைக்கும் கோவில் என பெயர் பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், ஓபிஎஸ் அணி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் அதிமுக நிர்வாகிகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்து தென்னை மரக்கன்றுகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் அம்மன் பி.வைரமுத்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் மா.தென்னரசு முன்னாள் நகர செயலாளர் புல்லட் பரிமளம் மற்றும் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
வழக்குகளில் இருந்து விடுபட வேண்டி காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுப்பட வேண்டி முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.