கன்னியாகுமரி மாவட்டம் மகளிர் சேவபாரதி குழுவினர் மேல ஈசாந்திமங்கலம் ஸ்ரீதிருவேங்கட விண்ணப்பெருமாள் கோயிலில் ஆடிமாத இறுதி ஒன்பது நாட்களில் தொடர்ந்து ராமாயண கதைகள், பாடல்கள் மூலம் பூஜைகள் நடத்திவருகின்றனர்.
எட்டாவது நாளான நேற்று திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டி பெருமாளை நினைத்து பஜனை பாடி சுமங்கலி பூஜை நடத்தினர். ஒன்பதாவது நாளான இன்று மழை பொழிந்து ஊர் செழிக்கவும் வாழ்வில் சுபிட்சம் பெறவும் ராமர் பட்டாபிஷேகம் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு காய் கனிகள், வடை பலகாரங்கள் போன்ற பிரசாத படைப்புகளை கோயில் வீதி வழியாக ஊர்வலமாக கொண்டுவந்து பெருமாளுக்கு படைத்தனர். பின்னர் ராமாயண கதைகள் மூலம் பக்தர்களுக்கு உபதேசங்கள் வழங்கப்பட்டு பெருமாளுக்கு மலர்களால் அட்சதை தூவி ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.