காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை வளாகத்திலேயே சித்த வைத்தியம், ஹோமியோபதி போன்ற பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மருத்துவர் ஐயப்பன் மாவட்ட அலுவலராக உள்ளார்.
சித்தா பிரிவில் பெண் ஊழியர் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். ஹோமியோபதி மருத்துவப் பிரிவில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உதவி மருத்துவராகப் பணியாற்று வருகிறார்.
கடந்த 18ஆம் தேதியன்று மாவட்ட மருத்துவ அலுவலர் ஐயப்பன் அலுவலகம் வரவில்லை. மேலும் 50 விழுக்காடு ஊழியர்கள் மட்டும்தான் பணிக்கு வரவேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளதால், முதல் தளத்தில் பெண் ஊழியர், முத்து கிருஷ்ணன் ஆகியோர் மட்டும் பணிக்கு வந்திருந்தனர்.
இதையடுத்து மருத்துவர் முத்துகிருஷ்ணன் பெண் ஊழியரிடம் தபால் கொடுக்க வந்துள்ளேன் எனக் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உடனே பெண் ஊழியர் தன்னுடைய கணவரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஹோமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன் இதேபோல், பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
தற்போது ஹோமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஐயப்பன், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர்களிடம் பெண் ஊழியர் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் மருத்துவமனை நிர்வாகம் ஹோமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் ஊழியர், ஹோமியோபதி மருத்துவர் மீது அளித்துள்ள பாலியல் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை மாவட்டத்தில் 4ஆவது நாளாக கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு!