காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் காந்தி சாலை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் இயங்கும் அதிமுக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் பேசியபோது,
அதிமுக என்ற இயக்கம் எஃகு கோட்டை போல் உள்ளது அதை எவராலும் தகர்த்து எறிய முடியாது.
ஒரே ஒருவர் கட்சியை விட்டு போனால் அது வேறு கதை. பல்வேறு கட்சியிலிருந்து இங்கு வந்து, பல கட்சிகளுக்கு போயுள்ளதும் வேறு கதை. அதைப்பற்றி எல்லாம் நமக்கு கவலை இல்லை. அதிமுக இன்று பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய நாடே திரும்பி பார்க்கின்ற வகையில் பல்வேறு சரித்திர சாதனைகளை அதிமுக உருவாக்கி வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு கருத்து கணிப்புகளில் வென்று காட்டி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதேபோல வரும் நாடாளுமன்றத்திலும் அதிமுக நிச்சயமாக வென்று காட்டும்.
12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் பள்ளிப்படிப்பு முடிந்த உடனே வேலை வாய்ப்பு உத்தராவதம் தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பேசினாலும் அவர் கட்சிக்கு மட்டும்தான் தளபதியாக இருக்க முடியுமே தவிர, தமிழகத்துக்கு தலைவராக வர முடியாது என்று பேசினார்.