காஞ்சிபுரம்: தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான, இல. கணேசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சென்றிருந்தார்.
அப்போது, அங்கு நடைபெற்ற சங்கரமடத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்று விட்டு சென்றிருந்தார்.
ஆசி பெற்ற இல.கணேசன்
இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை, மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்து, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (ஆக 22) உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் காஞ்சி சங்கரமடத்தின் 68ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் தங்கியுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ வியேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்திக்க வருகை புரிந்தார்.
மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு முதல் முறையாக இன்று (ஆக 23) ஒரிக்கை மகா பெரியவர் மணிமண்டபத்திற்கு வந்த இல. கணேசனை காஞ்சி சங்கர மடம் சார்பில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
மணிப்பூர் ஆளுநர்
பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை இல. கணேசன் சந்தித்து ஆசி பெற்றபோது, 'தமிழ்நாட்டிலிருந்து மணியானவர் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்பதற்கு எனது வாழ்த்துக்கள்' என புகழாரம் சூட்டினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த இல. கணேசன் கூறியதாவது, “வருகிற 27ஆம் தேதியன்று மணிப்பூர் ஆளுநராக பொறுப்பு ஏற்க உள்ளேன். அதற்காக 26ஆம் தேதியன்று சென்னையில் இருந்து புறப்படுகிறேன்.
52 ஆண்டுகளாக சாதாரண தொண்டனாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணிபுரிந்து அரசாங்க பணியினை ராஜினாமா செய்து முழு நேர அரசியல் வாழ்க்கையில் பணிபுரிந்தவருக்கு அங்கீகாரம் தரும் வகையில் எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளாதாக நான் கருதுகிறேன்.
அரசியல் ஆன்மீகம் இலக்கியம்
என் நாடு, என் மக்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. உணர்வுப் பூர்வமாக ஒட்டு மொத்த பாரத தேசத்தையும், நான் அப்படி தான் கருதுகின்றேன். அனுபவ ரீதியாக கூட மணிப்பூர் பகுதி எப்படிப்பட்ட பகுதி என தெரிந்து கொள்ள அரசு எனக்கு ஒரு வாய்ப்பை தந்துள்ளது. அதனை மகிழ்ச்சியோடு ஏற்று செல்கிறேன்.
எனது குடும்பம் காஞ்சி மடத்தோடு சம்பந்தப்பட்டது. ஆகையால், நான் காஞ்சி மடத்தின் பீடாதிபதிகளோடு தொடர்பு வைத்துள்ளேன். அதனடிப்படையில் நான் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகிற போது மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரிடம் ஆசியை பெற்ற பின் பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இங்கு வந்தேன்.
அரசியலோ, ஆன்மீகமோ, இலக்கியமோ அதன் பின்னால் இருக்கும் தேசத்தில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். அதில்தான் என் முத்திரை பதிந்துள்ளது. அது தமிழாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும், அப்பணி தொடரும். அதற்கும் தற்போது நான் ஏற்று இருக்கும் பொறுப்பிற்கும் எந்த தடையும் இல்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் கட்டளை