இடைக்கழி நாடு என்கின்ற பழமை பெற்ற பேரூராட்சியில் 24 கிராமங்கள் உள்ளன. அதில், வில்லிவாக்கமும் ஒன்று. இங்குள்ள பெரும்பாலான மக்கள் உப்பு உற்பத்தி கூலி தொழிலாளிகளாக வேலை செய்துவருகின்றனர்.
இப்பகுதியில், கடந்த 29 ஆண்டுகளாக தனியார் உப்பு உற்பத்தி நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இங்கு கூலித்தொழிலாளிகளாக வேலை செய்துவரும் இப்பகுதி கிராம மக்களுக்கு இதுவரை எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தற்போது, ஆண்களுக்கு 330 ரூபாயும், பெண்களுக்கு 170 ரூபாயும் கூலியாக அந்நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஆண் ஒருவருக்கு 500 ரூபாயும், பெண் ஒருவருக்கு 300 ரூபாயும் கூலியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் நிறுவனம் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், எந்த சலுகையும் நிறைவேற்றாத நிறுவனத்தை எதிர்த்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தங்களின் கோரிக்கையை அரசு உடனே ஏற்று, மாவட்ட ஆட்சியர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என உப்பளத் தொழிலாளர்கள், கடல் சார் தொழிலாளர்கள் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.