காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம் ஊராட்சியில் இயங்கிவரும் அரசு தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனம், இப்பள்ளியின் வளாகத்தில் விளையாட்டுப் பூங்கா ஒன்றை அமைத்துக்கொடுத்துள்ளது.
இந்நிலையில், அந்தக் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் விழாவில் கலந்துகொள்ள வந்த சச்சின், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பூங்காவினை நேற்று பார்வையிட்டார். அப்போது, மாணவர்கள் 'வெல்கம் சச்சின்' என்ற பதாகைகளை ஏந்தியவாறு சச்சினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு பள்ளி மாணவர்கள் மற்றும் பூங்கா ஊழியர்களுடன் அமர்ந்து சச்சின், குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் புனித மேரி, பூங்கோதை உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் சிறுமிகள், தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை’ - திருமா குற்றச்சாட்டு