காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூரில் ஆறுபடை இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற தனியார் கல் குவாரியில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். அங்குள்ள 200 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, மேலிருந்த மண், கல் திடீரென சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அதிக அளவில் மண், கற்கள் சரிந்ததில் பணியிலிருந்த லாரிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன. இதனையடுத்து இரண்டாவது நாளாக நேற்றும் மீட்புப்பணிகள் நடைபெற்றுவந்தன. மேலும் மண் சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகில் கொட்டிவைக்கப்பட்டுள்ள மண், பாறைகளை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
அதேபோல் விபத்தில் சிக்கிய லாரிகள், டீசல் டேங்கர் லாரி ஆகியவற்றை மீட்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தற்போது இடிபாடுகளில் சிக்கிய லாரிகள், டீசல் டேங்கர் லாரி ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கல்குவாரி இடிபாடுகளை அகற்றும் பணியானது நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: நாட்டு வெடியால் காட்டுப்பன்றி உயிரிழப்பு!