உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். அயோத்தியில் உள்ள ராமருக்கும் காஞ்சிபுரத்துக்கும் நீண்ட தொடர்பு உண்டு. குழந்தை வரம் வேண்டிய தசரதன் காஞ்சிபுரம் அம்மனை தரிசித்தபின் ராமர் பிறந்தார் என்பது நம்பிக்கை.
இந்நிலையில் அயோத்தியில் அமையும் ராமர் கோயிலுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடம் முழுமையான ஆதரவை அளித்துவருகிறது. ராமருக்குக் கோயில் எழுப்பும் புனித பணியில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக காஞ்சி சங்கரமடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நன்கொடை பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
அவ்வகையில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கு காஞ்சி சங்கரமடம் சார்பில் பொதுமக்கள் மத்தியில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற மக்களும், பக்தர்களும் கலந்துகொண்டு ஸ்ரீராமபிரான் கோயில் கட்டுமான பணிக்குத் தங்களுடைய பங்களிப்பாக சங்கரமடத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரூ.1 கோடியை வழங்கினார்கள்.
மேலும் சங்கர் மடத்தின் தீவிர பக்தரான தஞ்சாவூர் மோகன் குடும்பத்தினர் ரூ.5 கோடியை ராமர் கோயில் கட்டும் பணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கினர்.
இந்நிலையில் காஞ்சி சங்கரமடம் சார்பில் சேகரித்த ராமர் கோயில் கட்டுமான பணிக்கான நிதியை காஞ்சி சங்கர மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திரம் டிரஸ்டின் பொருளாளர் ஸ்ரீ கோவிந்த தேவ்கிரி சுவாமிகள் வசம் ரூ. 6 கோடி நிதியை ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உடுப்பி ஸ்ரீ மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள், திருப்பதி தேவஸ்தானம் கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி, நகரின் முக்கியப் பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் மாயம்