கரோனா நோய்தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கான நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய காய்கறி சந்தையான ராஜாஜி காய்கறி சந்தையில், காய்கறிகள் வாங்க ஏராளமான பொதுமக்கள் கூடுவதால் இந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், காய்கறி சந்தையை, பொதுமக்கள் நலன் கருதி வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என காய்கறி சந்தை வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காய்கறி சந்தையை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், சந்தையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதை ரத்து செய்யக்கோரி ராஜாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் இன்று (மே.17) கடையடைப்பு நடத்தினர். இதனால் காய்கறிகளை வாங்க வந்த சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ராஜாஜி காய்கறி சந்தையை கட்டுப்பாடுடன் நடத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.