ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் ஃபாக்ஸ்கான் என்ற தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பூந்தமல்லி பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
அங்கு தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதால் ஊழியர்கள் பலரும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சாலை மறியல்
அவர்களில் எட்டு பெண்களின் நிலை குறித்து நிறுவன நிர்வாகம் சரியாகப் பதிலளிக்காததால், அப்பெண்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என வதந்தி பரவியது.
இதனால் ஊழியர்கள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியரால் கட்டுக்குள் வந்த நிலை
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி போராட்டக் களத்திற்குச் சென்று, உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்களில் இரண்டு பெண்களுடன் வாட்ஸ்அப் வாயிலாக காணொலி காட்சியில் போராட்டக்காரர்களின் முன்னிலையில் உரையாடினார். இதன்பின்னர் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
பின்னர், செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ”பெண் ஊழியர்கள் உண்ட உணவு விஷமாக மாறிய விவகாரத்தில் அனைவரும் நலமுடன் உள்ளனர். இது தொடர்பாக விடுதி காப்பாளர் மீது திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல்போன பெண்களின் எண்ணிக்கை ஆறு, அவர்களில் நான்கு பேர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மற்ற இருவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
சம்பந்தப்பட்ட இருவரிடம் காணொலி அழைப்பு மூலம் தொடர்புகொண்டு அவர்கள் நலமுடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுக்கடையை மாற்றக் கோரிய வழக்கு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு