காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(29). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். வழக்கம் போல இன்று(டிச.25) இவர் பணியில் இருந்த போது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஓட்டுநர் இறப்பு
அதனையடுத்து பாலசுப்பிரமணியம் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாகிகள், அவருக்கு முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் வாக்குவாதம்
பின்னர், பாலசுப்பிரமணியம் உடலை உடற்கூராய்வுக்காக பிண அறையில் வைக்கப்பட்டு, அரவது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது பாலசுப்பிரமணியம் குடும்பத்தார், அவர் பணியாற்றிய நிர்வாகத்தைச் சேர்ந்த யாரும் நடந்த சம்பவம் குறித்து, பாலசுப்பிரமணியனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பாலசுப்பிரமணியத்தின் உடலை பிண அறையில் வைத்து விட்டு சென்றவர்கள், அதற்கு பின் போனைக் கூட எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும், இதனால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மரணத்தில் சந்தேகம்
ஏற்கனவே பாலசுப்பிரமணியம் பணியாற்றிய நிறுவனத்தின் மனிதவள அதிகாரிக்கும், அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது. இதனால் பாலசுப்பிரமணியம் மரணத்தில் தங்களக்கு சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பாலசுப்பிரமணியம் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை!