காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த கருணாகரச்சேரி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோனிஷா (19) . இவருக்கு ஜனவரி 4ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (29) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
கடந்த வாரம் மோனிஷாவுக்கு தலை சுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால், அவர் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜன.22) மோனிஷா திடீரென ரத்த வாந்தி எடுத்தார். இதை கண்ட யுவராஜ் என்னவென்று கேட்டபோது வயலுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்தை குடித்தாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த யுவராஜ், உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார். மோனிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த சோமங்கலம் காவல் துறையினர் மோனிஷாவின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தற்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை