காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று காலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களை பராமரிப்பு சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) மணிவண்ணன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆனந்த் கூறுகையில், ”காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால் தொழிற்சாலைகளில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தி இருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களை தடுப்பதற்கு தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் வேலைக்கு வருபவர்களின் அடிப்படை ஆதாரங்களை பெற்றுக்கொண்டுதான் பணிக்கு அமர்த்த வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த சைல்டு லைன் உதவி எண்ணான 1098 குறித்து கோயில்கள் சுற்றுலா தளங்கள் என பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை உறுதி செய்வதில் சிறப்பான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
கரோனா காலத்தில் குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பாக இந்திய அரசு ஆன்லைன் வகுப்புகள் வழியாகவும் அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான குற்றங்கள் குறைந்துள்ளன. மேலும் ஆணையத்தின் மூலமாக பாலியல் குற்றங்கள் செய்வோரின் மீது நீதிமன்றங்கள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பாலியல் ரீதியாக தவறு செய்பவர்களுக்கு ஆணையம் மூலம் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் புதுக்கோட்டை போன்ற சம்பவத்தின் தீர்ப்புகள் அமைந்துள்ளது. கடந்த 2018, 2019ஆம் ஆண்டை காட்டிலும் குழந்தைகள் மீது பாலியல் ரீதியான குற்றம் செய்பவர்கள் அல்லது குற்றம் செய்ய தூண்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் உட்பட அனைத்து வகையான வன்முறைகளும் குறைந்துள்ளது” என தெரிவித்தார்.