காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (மார்ச் 21) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
”தமிழ்நாட்டில் எடுபிடி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. வேளாண்மை சட்டத்தை எதிர்த்து திமுக, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். பச்சைத் துண்டு பழனிசாமி தற்போது பச்சோந்தி பழனிசாமியாக மாறியுள்ளார்.
நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று சொல்வது போல பழனிசாமி நானும் விவசாயிதான் என்று கூறி வருகிறார். சசிகலாவை எட்டி உதைக்கும் துரோகியாக எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்டு வருகிறார். பழனிசாமி என்றாலே கமிஷன், கரப்ஷன், கலக்ஷன்தான்.
கோட்டையில் உட்கார்ந்துகொண்டும் கால் ஆட்டிக்கொண்டும் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டும்தான் இப்போது உள்ள தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும் இருக்கிறார்கள். பாம்பு, பல்லியைவிட விஷமானது துரோகம்தான் அதுதான் பழனிசாமி.
அதிமுக ஒரு இடத்தில்கூட ஜெயிக்கக்கூடாது. ஒரு தொகுதியில் அதிமுக ஜெயித்தால்கூட அது பாஜக வெற்றி பெற்றது என்றுதான் அர்த்தம்.
அதிமுக என்னும் கொள்ளை கூட்டத்தை விரட்டி அடிக்கவே நான் போராடிவருகிறேன். நான் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்கவில்லை நான் முதலமைச்சராக உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி திறக்கப்படும், நெசவாளர்களுக்கு மின்சாரம் 300 யூனிட் உயர்த்தப்படும், வீடு கட்டும் திட்டம் தொடங்கப்படும், ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் வருங்காலத்தில் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தரப்படும் எனவும்கூட முதலமைச்சர் கூறுவார்.
காஞ்சிபுரத்தில் அரசு சட்டக் கல்லூரியும், அரசு மருத்துவக் கல்லூரியும் துவங்கப்படும். காஞ்சிபுரம் மற்றும் செய்யூரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கபடும் எனவும் தமிழ்நாடு மக்கள் வாக்களிக்கும் முன்பு அடிமை ஆட்சி வேண்டுமா, வேண்டாமா என சிந்தித்து உதியசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: திமுகவில் உழைக்கும் தொண்டர்கள் ஓரம்கட்டப்படுவர்- அன்புமணி தாக்கு