காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34). கால்நடை மேய்ச்சல் தான் இவரது தொழில். இந்நிலையில், எப்போதும் போல தனது மாடுகளை இவர் மேய்த்துக் கொண்டிருக்கும்போது வாசு என்பவருக்குச் சொந்தமான கிரஷர் பகுதிக்குள் மாடுகள் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கு மாடுகள் 10 அடிக்கு மேல் கொட்டப்பட்டிருந்த பாறை மணல் (M SAND) மீது ஏறின. அப்போது மாடுகளை விரட்டுவதற்காக ராஜேஷ் முற்பட்டுள்ளார். தனது மாடுகளை வெளியேற்றும் முயற்சியில் அருகில் இருந்த உயர் அழுத்த (11,000 மெகாவாட்) திறன் கொண்ட மின் கம்பிகளை அவர் கவனிக்கவில்லை. இதனால் எதிர்பாராத விதமாக அந்த மின்கம்பிகள் ராஜேஷ் மீது உரசியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக சோமமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் வாசு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - அதிர்ச்சி காணொலி!