காஞ்சிபுரம் நகரில் 2,000 ஆண்டுகள் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீரின் அடியில் இருந்து அத்தி மரத்தினால் செய்யப்பட்ட அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு 36 நாட்கள் படுத்த நிலையிலும், 12 நாட்கள் நின்ற நிலையில் என 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் கொடுக்க உள்ளார்.
இதற்காக அனந்தசரஸ் என்ற வற்றாத திருக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி தூர்வாரி அத்திவரதர் சிலை வெளியே எடுக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொள்ள சென்னை எல்என்டி நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கோயில் குளத்தில் உள்ள நீரின் அளவு, சேற்றின் அளவு, குளத்தின் நீளம் ஆழம் மற்றும் நீரை வெளியேற்றி குளத்தை தூர்வாரும் பணிக்கு எத்தனை நாட்கள் பிடிக்கும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.