காஞ்சிபுர மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(63). இவர் அதே பகுதியில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு அங்கேயே பெட்டி கடை நடத்தி வந்தார்.
நேற்று இரவு கடையில் இருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கடைக்குள் அமர்ந்திருந்த செல்வராஜை, அங்கிருந்து வெளியே இழுத்து வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் முகத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த செல்வராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் குன்றத்தூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல் துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்த செல்வராஜ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வராஜ் கடையின் அருகில் உள்ள டீக்கடையில் மூன்று பேர் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில் செல்வராஜை அந்த நபர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அவர் அளித்த புகாரின் பேரில் 18 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுவன் இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியே வந்துள்ளார். தன்னை சிறைக்கு அனுப்பியவரை பழிவாங்கும் விதமாக அந்தச் சிறுவன் தனது நண்பர்களை திரட்டி இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கொலை நடந்தபோது அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வந்தவாசி அருகே மாயமான தாய், பிள்ளைகள் சடலமாக மீட்பு!