காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் கனடா நாட்டு பன்னாட்டு தொழில் நிறுவனத்தின் ஒரு பகுதியான தனியார் தொழிற்சாலை எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 74 நாட்களாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (நவ.30) 75ஆவது நாளில் ஒரகடம் பகுதியில் உள்ள முக்கிய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்கள் தெரிவிக்கையில், இந்த தொழிற்சாலையில் 77 நிரந்தர பணியாளர்களும், 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் தொழிலாளர்களின் நலனுக்காக ஏற்கெனவே ஐஎன்டியூசி என்ற தொழிற்சங்கம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ளது.
இந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் இங்கு வேலை செய்கின்ற பணியாளர்களுக்கு உதவியாக இல்லாமல் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு வந்ததால் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உழைப்போர் உரிமை இயக்கம் ஏல்.டி.யு.சி என்ற சங்கத்தை தொடங்கினர். இதனால் கோபமடைந்த நிர்வாகம் இச்சங்கம் தொடங்க முன்னோடியாக செயல்பட்ட நான்கு தொழிலாளர்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்