காஞ்சிபுரம் பெரு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஏழாவது வார்டு பகுதியில் உள்ள தாமல்வார் தெரு சாலை, மிகப் பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலை சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரத்துடன் இணைக்கும் மிக முக்கிய சாலை. இந்தச் சாலை கடந்த மூன்று மாத காலமாக மழையின் காரணமாக குண்டும் குழியுமாக இருந்து வந்தது. மேலும் பல இடங்களில் பாதாள சாக்கடைகளில் உள்ள கழிவு நீர் வெளியேறி மழைநீருடன் கலந்து சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசனின் கவனத்திற்கு திமுக நிர்வாகிகள் கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த எழிலரசன் நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி அலுவலர்களை அழைத்து உடனடியாக இந்த சாலையை சரி செய்ய வேண்டும், கழிவு நீர் வெளியேறுவதை தடுத்து முறையான வடிகால் அமைத்து தர வேண்டும் என உத்தரவிட்டார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசனிடம் அலுவலர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த சாலையை சீரமைத்து அனைத்து வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.
இதையும் படிங்க...முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்