காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரக வன அலுவலராகப் பணிபுரிந்துவருபவர் ராமதாஸ். இவர் காஞ்சிபுரம், வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள வனங்களைப் பாதுகாத்து கண்காணித்துவரும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம், வாலாஜாபாத் பகுதிகளில் செயல்படும் மரக்கடைகள், வனங்களிலிருந்து மரங்கள் வெட்டிக் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறதா எனக் கண்காணித்து மரக்கடை நடத்த உரிய தடையில்லா சான்று வழங்கிட வேண்டும். காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கடைகள் இயங்கிவருகின்றன.
இந்த மரக்கடைகளுக்குத் தடையில்லா சான்று வழங்க வனச்சரகர் ராமதாஸ் ஆயிரக்கணக்கில் பணத்தை கையூட்டுப் பெறுவதுமாகவும், ஒவ்வொரு கடையிலும் மாதா மாதம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து மரக்கடை ஒன்றில் வனச்சரக அலுவலர் ராமதாஸ் கையூட்டு வாங்குவதும், குறைவாகப் பணம் கொடுக்கும் நபரிடம் பேரம் பேசிய காணொலி வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இதேபோல்தான் கடந்த சில நாள்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் குமார் கையூட்டுப் பெறும் காணொலி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வனச்சரகர் ராமதாஸ் கையூட்டுப் பெறும் காணொலியும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நாடக அரசியல்; திமுக அரசே மொத்த நகைக் கடனையும் ரத்துசெய்!'