காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தனியார் இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த எட்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று வடமாநில தொழிலாளர்கள் அகிலேஷ், சுரேந்தர் மற்றும் ஜக்ஷி ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 90 சதவிகித தீ காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றொரு தொழிலாளியான தினேஷ் என்பவர் இன்று உயிரிழந்தார்.
மேலும் நான்கு பேர் புத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்த ஒப்பந்ததாரர் பிண்டு என்பவர் அளித்த புகாரின் பேரில், கவனக்குறைவு, பாதுகாப்பு, வசதியின்மை காரணங்களால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தனியார் தொழிற்சாலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும்இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகிகள் சீதாராமன், ராகவேந்திரா மற்றும் முகமது சேஷா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.