காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(24). கஞ்சாவுக்கு அடிமையான இவர், கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கும், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த ஆணை என்ற ஆனந்தனுக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், ஐயப்பனை 26ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காணமால் போன இளைஞர் கொலை
புகாரை ஏற்றுக்கொண்ட சிவகாஞ்சி காவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து ஐயப்பனை தேடிவந்தனர். மேலும், ஆணை என்ற ஆனந்தனிடமும் காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ஐயப்பனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து, முத்துவேடு ஊராட்சிக்குட்பட்ட பிச்சவாடி கிராம சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் ஆற்றில் பள்ளம் தோண்டி புதைத்தது தெரியவந்தது.
கஞ்சா விற்பதில் தகராறு
இன்று காஞ்சிபுரம் கோட்டாட்சியர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட ஐயப்பனின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யப்படவுள்ளது. ஐயப்பனின் கூட்டாளிகளான அரவிந்தன், ஹரிபாபு ஆகியோர் ஆனந்தனை தாக்கியதால், ஆனந்தனின் கூட்டாளிகள் ஐயப்பனை கொலை செய்ததது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொலையில், தொடர்புடைய ஆனந்தன், அவரது கூட்டாளிகளான முசரவாக்கத்தைச் சேர்ந்த சோமா என்கிற செல்வம், முருகன், குள்ளி சுரேஷ், அபி என்கிற குணா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பல குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், கஞ்சா விற்பனை இவர்களின் பிரதான தொழில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 5 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெய் பறிமுதல்!